அழியாச் சுவடு - மனோகர ராஜ் மாணிக்கம்

  CLUBHOUSE-இல் வாசிக்கப்படவிருக்கும் சிறுகதை (17.11.2021)


வீட்டிலிருக்கும் மேசையை நோக்கி அகீரா வேகமாகக் குரைக்கின்றது. வீடே பார்ப்பதற்கு நேர்த்தியாகவும் குறைந்த பொருட்களையும் மட்டுமே கொண்டிருக்கின்றது. சுற்றிலும் மரங்களும் செடிகளும் வீட்டைச் சூழ்ந்துள்ளன. நகர்புறத்தில் காண இயலாதப் மரப் பலகையால் கட்டப்பட்ட பசுமையானதொரு வீடு இது. இந்த வீட்டை ஏஞ்சலாவின் தாத்தாவே சுயமாக வடிவமைத்துள்ளார். ஏஞ்சலா தன்னுடைய வீட்டில் அதிகமான பொருள்களை வாங்கி வைத்துக் கொள்வதை விரும்பமாட்டாள். குறைவான பொருட்கள், நேர்த்தியான இடம், நிசப்தம் தரும் சூழல், அகீரா ஓடி ஆடி விளையாடுவதற்கான பரந்த விரிந்த இடம் ஆகியனவே இவளின் மாளிகை. நகர்புறத்தில் பல பெரிய வீடுகள் இருந்தாலும் இந்த வீட்டின் சாயல் மட்டும் பழைய சுவடுகளை நினைவூட்டும் தன்மைகளைத் தாங்கி நிற்கின்றது. வீட்டைச் சுற்றி வேலியாக நிற்கும் இரப்பர் மரங்களின் அசைவில் துளிர்விடும் மென்குளிர் காற்று மூடியிருக்கும் வீட்டின் ஜன்னல் சந்துகளில் ஊடுருவிச் செல்கின்றது. அதன் அருகே ஜப்பான் ஆதிக்கத்தின் போது கட்டப்பட்டச் சிறிய கிணறு. கட்டப்பட்ட கிணற்றில் இருக்கும் கண்ணாடிப் போன்ற நீர், வானத்தின் ஒவ்வொரு அசைவையும் பிம்பமாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது. அருகில் கிணற்றினோரம் இருக்கும் சிறிய துவாரத்தை மெல்லமாகத் துளவிப் பார்த்தால் குட்டிப்பாம்புகள் சுருண்டுக் கிடக்கின்றன. கொஞ்சம் அருகில் பக்கத்து வீட்டுச் சிறுவன் ஒருவன் அந்தக் கிணற்றில் கூழாங்கற்களை வீசி, நிழலாடும் பிம்பங்களைக் களைத்துக்கொண்டிருக்கின்றான். வானம் தெளிய, வண்டுகளின் ஓசையும் மூர்க்கமாகத் தொடங்கியது.

“பா, நீங்க முதல்ல இங்க வாங்க!. காலையிலே அகீராகிட்ட விளையாடாதிங்க. மேசையில சுடச் சுட வரக்கோப்பிக் கலக்கி வச்சிருக்க. வந்து குடிங்க முதல்ல, இல்லன்னா ஆறிடப்போகுது. மறுபடியும் கேட்டீங்கனா, நான் கலக்கிக் கொடுக்க மாட்டேன், சொல்லிட்டன்!. ஹோஸ்பிட்டல்ல இன்னைக்கு எனக்கு அப்பாய்ண்ட்மெண்ட் வேற இருக்கு”

“இதோ வரம்மா....!”

“பா பக்கத்து வீட்ல இருக்கற பையன் வேற அந்தக் கிணத்துலேயே விளையாடிக்கிட்டு இருக்கான். ஒன்னு

மணலக் கொட்டி அந்தக் கிணற மூடுங்க, இல்லன்னா ஏதாவது விபரீதமா போய் முடியப் போகுது. அவன் அம்மா

என்னனா நாமதான் அவன புடிச்சு வச்சிக்குற மாதிரி தெரு முழுக்க தப்பட்டை அடிச்சிக்கிட்டு இருக்கா...”

“அந்தக் கிணறதான் இரும்பு கம்பியில பூட்டு போட்டு மூடியிருக்காங்களே அப்புறம் என்ன மா பிரச்சன?”

“எத்தண வருசமாச்சுப்பா. அந்த இரும்புக் கம்பியெல்லாம் இந்நேரத்துக்குத் திருப்புடிச்சு போயிருக்குமோ

 என்னவோ. எனக்கு என்னவோ அத மண்ண கொட்டி மூடுறதுதான் சரியாப் படுது”

“ஜப்பான் காரனுங்க நம்ப நாட்டோட ஆட்சியக் கைப்பற்றதுக்கு முன்னாடி, உன்னோட தாத்தாதான்மா, இந்தக் கிணற தன்னோட சுய உடல் உழைப்பில தோண்டனாறு. கூட்டிக் கழிச்சு மொத்தமா 40 நாள் எடுத்துச்சு. அன்னைக்கு இருந்த சூழ்நிலையில இந்தக் கிணறுதான் தண்ணீர் இல்லாத குறையைப் போக்குச்சு. இன்னைக்கு இருக்குற வசதியெல்லாம் அன்னைக்கு எங்க இருந்துச்சு. காக்காய்க்குச் சீனி ஓட்டுற வேலைன்னு மலாயாவுக்கு கூலியாய்க் கூட்டிட்டு வந்து நம்ப உழைப்பைச் சுறண்டனுதான் மிச்சம். பலபேர் பொலப்பத்தேடி திரும்பவும் ஊருக்குப் போனாலும் பலபேர் இங்கேயே இருந்துட்டாங்க. இவங்கல்ல பலபேர் ஜப்பான் காரன் ஆட்சியில காணாமலேயே போய்ட்டாங்க. இன்னும் பலபேர் காலராவிலும் வியாதியிலும் உயிர விட்டாங்க. இன்னைக்கு மலேசியாவுல நம்மள அடையாளம் காட்டுறது..............தண்டவாளமும் இரப்பர் தோட்டமும்தான். ஒவ்வொரு தண்டவாளத்தோட கட்டையும் ஒவ்வொரு இரப்பர் மரமும் பலபேரோட தியாகத்த கதையாச் சொல்லும். எத்தண உயிர் போச்சோ....?....மனசாட்சி இல்லாத ஆட்சி. சொன்னத செய்யனும். உடுத்துறதுக்கு கோணி சாக்கு. சாப்புடறதுக்கு காட்டுக் கிழங்கு. கொஞ்சம் பிசகினாலும் அடி மேல் உதை. இல்லன்னா கண்ணுக்கு முன்னாடியே கழுத்த வெட்டுவானுங்க....!”

இப்படி, மலாயாவில் இருந்தவர்களில் ஏஞ்சலாவின் தாத்தாவும் ஒருவர். இதற்கு இந்த வீடும் கிணறும்தான் சாட்சி. பிறகு, ஜப்பான் காரன் ஆட்சியின் போதுதான் ஏஞ்சலா பிறந்து சரியாக மூன்று மாதம். நாடே இந்த அரக்கர்களின் ஆட்சியில் நடுங்கிப் போயிக் கிடந்தது.

“நீங்க எப்படிப்பா சமாலிச்சிங்க...!”

“மூணு நாளு சாப்பிட சாப்பாடில்லாம பட்டினியில இந்தக் கிணத்துல தொங்குற இரும்புக் கைற

புடிச்சிக்கிட்டுதான்மா நாங்க ஒழிஞ்சிறுந்தோம். ஒரே இரத்த நாத்தம். தலையில்லாமச் சில பொனங்க கிணறுல

உப்பிப் போய் மிதந்துக்கிட்டிருந்துச்சு. இரத்த வெல்லம்னு சொல்லுவாங்க இல்லையா. அத முதல்தடவையா

அப்பதான்மா நான் பார்த்த.....ஜப்பான் கார ஆட்சி நம்மவங்களுக்கு சாபக் கெடுதான்.

“விடுங்கப்பா.......”

“உங்க அத்த இன்னும் வரலயா.....?

“காலையிலே, வந்துரன்னு சொன்னாங்கப்பா, ஆனா இன்னும் வரல..!”

“காலைலயே தோட்டத்துக்கு போய்ட்டு மரம் வெட்டிட்டு வரனும் இல்லயா....வந்துருவா கொஞ்ச நேரத்துல. நீ கிளம்பிட்டயா?”

“இன்னும் இல்லப்பா, உங்கக்கிட்ட பேசிக்கிட்டிருந்ததுதல நேரம் போனதே தெரியல பிறகு எங்க நா

 கிளம்புறத்து...”

“சரி சரி...நீ போய் முதல்ல கிளம்பு...உங்க அத்த வந்தா காத்துக்கிடப்பா மணிக்கனக்கா, போகுறதுக்கு முன்னாடி அகீராவுக்குச் சாப்பாடு கொடுத்துட்டு போ..."

ஏஞ்சலா அகீராவிற்கு உணவை வைத்துவிட்டு மருத்துவமனைக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தாள்.

“ஏஞ்சலா....!....ஏஞ்சலா...!”

“மா....உங்க அத்த வந்துட்டா போல...போய் கதவத் திற....!”

“ஆ.....பா....இதோ போறன்!”

அகீரா மீண்டும் வேகமாகக் குரைக்க, வீட்டின் நுழைவாயில் தொங்கவிடப்பட்டிருக்கும் மணிகள் காற்றிலாடி ஒலியை எழுப்பின.

“நிள்ளுங்க அத்த இதோ வர!”

“பார்த்து வாமா....!”

“ஆ......”

ஏஞ்சலா கதவை மெல்லத் திறக்கின்றாள்.

“என்னடி பன்னிக்கிட்டு இருக்க உள்ள, வீடே இவ்வளவு இருட்டா இருக்கு..இந்த இருட்டுலயா கிளம்பிக்கிட்டு இருந்த?”

“என்ன அத்த புதுசா கேக்குற....லைட் போட்டா மட்டும் என்னால பார்க்க முடியுமா என்ன ?

அத்தை நேரத்தை விரயம் செய்யாமல் உடனே வீட்டின் ஜன்னல்களைத் திறந்து, இருளைக் களைந்து வெளிச்சத்தை வீடேங்கும் பரவச் செய்கின்றார். பிறகு, மேசையில் வைக்கப்பட்டிருக்கும் தேனீரைப் பார்க்கிறார். எறும்புகள் கூட்டமாய்த் தேனீரில் இருக்கும் இனிப்பினை முகர்ந்து, படையெடுத்து வருகின்றன.

“யாருக்குமா வரக்கோப்பி கலக்கி வெச்சிருக்க....எனக்காகக் கலக்கினயா என்ன?”

“உங்களுக்கு இல்ல அத்த அப்பாவுக்குதான் கலக்குன...நாங்க பேசுனதுதல வரக்கோப்பியே ஆறிடுச்சு!”

அகீரா மீண்டும் வேகமாகக் குரைக்கின்றது.

“சரி, ஏஞ்சலா நேரமாகியிருச்சு, வா புறப்படுவோம்......!”

“சரி அத்த”

“நீ நடக்கறதுக்கு பயன்படுத்துற வெள்ளைக் கம்பெல்லாம் எடுத்துக்கிட்டயா?”

“எடுத்துக்கிட்ட அத்த”

“மெடிக்கல் ரிபோர்டு?”

“அதுவும் எடுத்துக்கிட்ட அத்த”

“அப்ப சரி வா புறப்படுவோம்....இல்லன்னா அங்கப் போய் டாக்டர் கண்டதையும் கேட்டு  

 உசுர வாங்குவாரு.!”

“அத்த இன்னைக்கு எனக்குப் பிறந்தநாள். உங்களுக்குத் தெரியுமா?”

“எப்படிமா தெரியாம இருக்குமா. ஹோஸ்பிட்டலுக்குப் போயிட்டு வேலையெல்லாம் முடிச்சிட்டு நம்ப

நேரா வீட்டுக்குப் போவோம். அத்த தடபுடலா விருந்து தயார் பன்றன் உனக்கு.....!”

“ஆமாவா அத்த...அப்படின்னா அப்பாவையும் நம்ம கூட்டிட்டு போவோமா?

ஏஞ்சலாவின் கேள்விக்கு அத்தை பதிலளிக்காமல் மெளனமாக இருக்கின்றார். அமைதி இடத்தைச் சூழ மெல்லியக் காற்று மீண்டும் நுழைவாயில் தொங்கவிடப்பட்டிருக்கும் மணிகளை லெசாக உரசிச் சென்றது. மணியின் ஓசையில் அத்தையின் ஆழ்மனம் உயிரில்லா ஒன்றுக்கு உருவத்தைச் செதுக்க, அவரை அறியாமலேயே உடல் வேர்வையில் நனைந்தன. சில நொடிகளில், வாடகை வண்டி வந்தவுடன் ஏஞ்சலா அகீராவின் காளரைப் பிடித்துக்கொண்டு வண்டியின் பின்புறத்தில் அமர, அத்தை வண்டியின் முன்புறம் அமர்ந்தார். வாடகை வண்டி வீட்டை விட்டு விடைபெறும் நேரத்தில் அகீரா மீண்டும் குரைத்தது. 1941-ஆம் ஆண்டு, ஏஞ்சலாவின் தந்தையும் அவளது அம்மாவும் வீட்டினோரம் இருக்கின்ற கிணற்றில் ஜப்பானியர்களின் கொடூரச் செயலில், இரத்த வெள்ளத்தில் கிடந்த காட்சி அத்தையின் மனதை மீண்டும் ஆக்கிரமிக்கத் தொடங்கியது.

Comments

Popular posts from this blog

எலி - யோகாம்பிகை இளமுருகன்

சமம் - சுமத்ரா அபிமன்னன்

கடா – AK ரமேஷ்