கடா – AK ரமேஷ்

 

சின்னையாவின் கார் இயந்திரம் திடீரென செயலிழந்தது. சீறிப் பாயும் ஜகுவார் வகை கார் சிணுங்கிக் கொண்டே நின்றது. சாலையின் இரு மருங்கிலும் மண் தரை இருந்ததால் காரைப் பாதுகாப்பாக நிறுத்த ஏதுவாக இருந்தது. நிதானமாக இரு பக்கமும் சமிக்ஞை விளக்கை எறியச் செய்தார். அப்போதுதான் இருட்ட ஆரம்பித்துக் கொண்டிருந்தது. சதுர்தசி திதி முடியும் நேரம் அது.

நேர் சாலைதான். பெஸ்தாரி ஜெயாவிலிருந்து ரவாங் செல்லும் பாதை அது. ஸ்ரீ தண்டயுதபாணி ஆலயத்தில் அவசரம் அவசரமாக முருகப் பெருமானைத் தரிசித்து விட்டு இரவு 8.30 மணிக்குள் செராஸில் வீட்டை அடைய திட்டமிட்டிருந்தார் சின்னையா.

பெஸ்தாரி ஜெயா சின்னையாவுக்கு அவ்வளவு பழக்கமில்லாத இடம். ஒரே இருட்டு. நீண்ட இடைவெளியில் நிறுவப்பட்டிருந்த சாலை மின்விளக்கின் மெல்லிய ஒளியில் சாலையின் வலது பக்கம் செம்பனை மரங்கள் தெரிந்தன. இடது பக்கம் ஏதோ திறந்த வெளி போல் தெரிந்தது. அங்கு வீடுகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஓரிரு வாகனங்கள் அவரைக் கடந்து சென்றன.

என்ன ஆச்சு? பெட்ரோல் பாதிக்கு மேல இருக்கு. பெட்டரி மாத்தி எவ்வளவு நாள் ஆச்சு? அவரால் நினைவு கூற முடியவில்லை. சிங்கப்பூரில் வேலை செய்யும் மூத்த மகனின் கார்தான். தூரப் பயணங்களுக்கு மட்டுமே பயன்படுத்துவார். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு முறை கூட இப்படி ஆனதில்லை. பல வருடங்களாக கார் ஓட்டும் அனுபவம் இருந்தும், சின்னையாவுக்குக் கார் பழுது பார்க்க அவ்வளவாகத் தெரியாது. சின்னையாவுக்கு அந்த இருட்டில் காரை விட்டு இறங்க சற்றுத் தயக்கமாகத்தான் இருந்தது. ஆனாலும் வேறு வழியில்லை. காரின் என்ஜின் பகுதியைத் திறந்து பார்த்தார். அவருக்குத் தெரிந்த வரை ஏதேதோ செய்து பார்த்தார். ஆனால் அவரின் அதிகபட்ச கவனம் அந்த சுற்றுப் பகுதியில் தான் இருந்தது. ஏதேனும் விஷ ஜந்துக்கள் வந்து விடுமோ என்ற அச்சம். செம்பனை மரம் இருக்கும் இடங்களில் பாம்புகள் ஊர்வது சாதாரணம். அதுவும் இரவு நேரம் வேறு.

வாகனங்கள் அவரைக் கடக்கும் போது தான் மனதிற்கு ஆறுதலாக இருந்தது. மற்ற நேரங்களில் இருளோடு ஒரு வகை பயமும் அவரைச் சூழ்ந்து கொண்டிருந்தது. உதவி கேட்பதைத் தவிர வேறு வழியில்லை. தூரத்தில் ஒரு கார் வருவது தெரிந்தது. தயக்கத்துடன் கையை அசைத்து உதவி கேட்க முயன்றார். வந்த வேகத்திலேயே அவரைக் கடந்து சென்றது அந்தக் கார்.  

“சே, என்ன மனுஷங்க. ஒரு காடி டபுள் சிக்னல் போட்டு நிக்குதுன்னா என்ன ஏதுன்னு வந்து கேக்க மாட்டாங்களா”? சலித்துக் கொண்டார் சின்னையா. மறுகணமே “நானா இருந்தாலும் நிக்கத் தயங்குவேன் தான். இந்த காலத்துல யார நம்ப முடியுது”? தனக்குத் தானே ஆறுதல் கூறிக் கொண்டார்.

மீண்டும் ஒரு கார். நிற்பானோ மாட்டானோ என்ற சந்தேகத்தில் கையைக் காட்ட தயங்கிக் கொண்டிருந்தார். முன்புறத்தில் இரண்டு விளக்குகளுடன் இடது பக்கத்தில் மூன்றாவது மஞ்சள் விளக்கும் விட்டு விட்டு எறியத் தொடங்கியது. யாரோ உதவ வருகிறார்கள். கார் பழுது பார்க்கத் தெரியுமா? காரோடு வீடு போய் சேர்வேனா? நம்மவர்களா? நம்பலாமா? சின்னையாவின் மனதில் ஆயிரம் கேள்விகள்.

வேகமாக வந்த அந்த கார் சின்னையாவின் காரின் பின்னால் மிக அருகில் நின்றது. அது வெள்ளை நிற பழைய புரோட்டோன் சாகா. காரின் இடுப்பைப் பெயர்த்துக் கொண்டு உள்ளிருந்து ஒரு ஆஜான பாகு உடல் அமைப்பை கொண்ட ஒருவன் வெளியே வந்தான். ஆள் உயரம். ஆறடியைத் தாண்டியிருக்கும். கார் விளக்கை அணைக்காததால் சின்னையாவுக்கு அவன் முகம் சரியாகத் தெரியவில்லை.

“கெனாப்பா பாங்? கெரெத்தா ரோசாக்கா”? அவன் பேசிய மலாயில் தமிழர்கள் மலாய் பேசும் சாயல் இருந்தது. சின்னையாவின் நெற்றியில் திருநீற்றைப் பார்த்தவன், சிரித்துக்கொண்டே “தமிழ் ஆளா? மலாய்க்காரன்னு நெனச்சேன்”. என்றவன் சின்னையாவின் முன் வந்து நின்றான். ஆள் பார்ப்பதற்கு முரடனாகத் தென்பட்டான். நடுத்தர வயது இருக்கும். பெரிய முகவெட்டு, அடர்த்தியான மீசை, சவரம் செய்யாத தாடி, கூர்மையான பார்வை, முரட்டுக் கைகள். சீக்கியர்கள் அணியும் தடிப்பான வெள்ளி நிறத்திலான கடாவை இடது கையில் அணிந்திருந்தான். அவன் நடந்து வந்த விதமே ஒரு ரௌடி நடந்து வருவது போல் இருந்தது.

“என்ன சார்? காடி ரிப்பேரா?” அவன் தோற்றத்திற்கும் பேச்சுக்கும் சம்பந்தமே இல்லை. கனிவாகச் சிரித்த முகத்தோடு கேட்டான். “ஆமாம் பா. என்னன்னு தெரில. நல்லாதான் ஓடிக் கிட்டு இருந்திச்சு. திடீர்ன்னு நின்னுருச்சி”. நொடிப் பொழுதில் சின்னையாவுக்கு அவன் மீது நம்பிக்கை வந்தது. மேலும் பேசுவதற்குள் கையில் அணிந்திருந்த கடாவை மணிக்கட்டிலிருந்து மேல்நோக்கி திருகியவாறு இழுத்துக் கொண்டே காரின் என்ஜினைப் பார்க்க ஆரம்பித்தான்.

“எங்கிருந்து சார் வர்றீங்க? உங்கள பாத்தா இங்க உள்ள ஆளு மாரி தெரிலயே”. பேசிக் கொண்டே என்ஜின் பகுதியில் ஏதோ செய்து கொண்டிருந்தான். “ஆமாம் பா, கே.எல் லேர்ந்து வர்றேன். படிப்புக்காக மகள இங்க தான் யூனிசெல்ல பதிஞ்சிருக்கேன்”.

“கொஞ்ச வெல்லனே போயிருக்கலாம்ல. இந்த ரோடு கொஞ்சம் மோசம் சார். அதுக்குத்தான் சொல்றேன்”. குனிந்து காருக்கு அடியில் எதையோ இழுத்தவாறு பேசிக் கொண்டிருந்தான் அந்த முரட்டு மனிதன்.

“அப்பவே கெளம்பி இருக்கணும். எங்க விட்டா என் மக(ள்). கூடவே இருந்து, தேவையானதெல்லாம் வாங்கி குடுத்து கெளம்ப நேரமாச்சுப்பா”. நெருங்கிய நண்பனிடம் பேசுவது போல் பேச ஆரம்பித்தார் சின்னையா.

“சார், நீங்க என்ன வாத்தியாரா?” கையின் மணிக்கட்டுக்கு சரிந்து நழுவிய கடாவை மீண்டும் மேல் நோக்கித் திருகினான்.

ஸ்கூல்ல தான் வேலை செய்யிறேன். ஆனா வாத்தியாரு இல்ல; கிராணி. இன்னும் ரெண்டு வருஷம்தான். ரிட்டையர் ஆவப் போறேன். என்ன பாத்தா வாத்தியாரு மாறியா இருக்கேன்”? இருவருக்கும் பேச்சு சுவாரஸ்யமானது.

“ஆமா சார், உங்கள பாத்தா என் தமிழ் வாத்தியாரு ஞாபகம் வருது. ரொம்ப நல்ல வாத்தியாரு. அப்படிதான் சொல்லிக் குடுப்பாரு. நான் தான் ஒழுங்கா படிக்கல. இல்லன்னா நானும் உங்க மாரி கிராணியாவோ அவரு மாரி வாத்தியாராவோ ஆயிருப்பேன். பழைய துணி ஏதாவது இருக்கா சார்?” எண்ணெய் பட்டு கருப்பானக் கையைக் காட்டிக் கொண்டே கேட்டான்.

காரிலிருந்து ஒரு துணியை அவனிடம் நீட்டிக் கொண்டே உரையாடலைத் தொடர்ந்தார் சின்னையா. “நீ என்ன வேல செய்யிற?”

“லோரி ஓட்டுறேன் சார். இப்பதான் லோரிய கம்பெனில போட்டுட்டு வீட்டுக்குப் போயிட்டு இருந்தேன். உங்கள பார்த்துட்டேன். இனிமேல தான் போயி குளிச்சிட்டுப் படுக்கனும்.” துணியால் கைகளைத் துடைத்துக் கொண்டே பேசினான்.

“அடடா, என்னால நேரமாச்சா?” குற்ற உணர்ச்சி மேலிட கேட்டார்.

“அப்படிலாம் ஒன்னுமில்ல சார். வழியில யாரோ கஷ்டப் படறத பாத்துட்டு பாக்காத மாரி போவ முடியுமா? லோரிக்காரங்களுக்கு இதெல்லாம் பழக்கம்தான். சாதாரணமாகவே பேசினான் அந்த முரடன்.

மெல்ல காரின் இரு புறமும் எரிந்து கொண்டிருந்த மஞ்சள் நிற சமிக்ஞை விளக்குச் சன்னமாக எரிவதைப் பார்த்து விட்டு, “சார் ஒங்க காடில ஒல்ட்டனெட்டர் கெட்டுப் போச்சின்னு நெனெக்கிறேன் சார், அதான் காடி நின்னு போச்சி. சிக்னல் லைட்டு கூட பாருங்க, மங்கலா எரிது. இன்னும் கொஞ்ச நேரத்துல அதுவும் நின்னுடும்”.

“இப்போ என்ன பண்றது?, கவலையானார் சின்னையா.

ஒன்னு பண்ணலாம் சார். என் காடிலேர்ந்து ஒங்க காடிய ஜம்ப் ஸ்தார்ட் பண்றேன். இங்கேர்ந்து 10 நிமிஷம் போனிங்கனா அங்க ரோட்டோரமாவே ஒரு மலாய்க்காரன் வொக்‌ஷோப் இருக்கும். அபாங் வொக்‌ஷோப்ன்னு மஞ்ச கலர் சைன் போர்ட் பெருசா தெரியும். அங்க போயி ஒல்ட்டனேட்டர் மாத்திடுங்க. இப்ப மணி எத்தன?” கைப்பேசியை எடுத்து மணி பார்ப்பதற்குள் சின்னையா முந்திக் கொண்டு “மணி 8.30. தொறந்திருப்பனா?” பதற்றத்துடன் கேட்டார்.

“ம்ம்ம்ம்ம்... இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு. ஒம்போதரைக்குதான் மூடுவான். நீங்க.................”

சரிப்பா.....................”

இருவரின் வார்த்தைகளும் மோதிக் கொண்டதில் சின்னையா அவனையே பேச வழி விட்டார்.

புன்முறுவலோடு “நீங்க இங்கயே இருங்க. நான் காடிய கொண்டு வந்து ஜம்ப் ஸ்தார்ட் பண்றேன்”. அவருடைய பதற்றம் அவனுக்கு வேடிக்கையாக இருந்தது.

எதிரும் புதிருமாக காரை நிறுத்தியவன், ஜம்ப் ஸ்தார்ட் கருவிகளைப் பொறுத்தினான். சின்னையா காரை இயக்கினார். உறுமிக் கொண்டே ஜகுவார் இயங்க ஆரம்பித்தது. சின்னையா பெரு மூச்சு விட்டார்.

“நான் சொல்லல? ஒல்ட்டனேட்டர் தான் சார், கொஞ்ச நேரம் பெட்டரி சார்ஜ் ஆயிட்டோன்னெ அந்தக் கடையில போயி ஒல்ட்டனேட்டர் மாத்திடுங்க” என்றான்.

“இப்படி நடக்கும்ன்னு நான் எதிர்ப்பாக்கவே இல்ல. நல்ல வேள நீங்க வந்தீங்க. உங்க பேரு கூட கேக்குல பாருங்க”.

வழக்கம் போல் மணிக்கட்டிலிருந்து கடாவை மேல்நோக்கித் திருகியவாறே “ரவி. உங்க பேரு சார்?”

என் பேரு சின்னையா.” என்னதான் இயல்பாகப் பேசிக் கொண்டிருந்தாலும் சின்னையாவின் மனதில் ஏதோ ஒன்று உறுத்திக் கொண்டே இருந்தது. தக்க நேரத்தில் வந்து உதவி செய்தானே. சும்மாவா அனுப்புவது. “இந்தாப்பா” என்று 50 ரிங்கிட்டை அவனிடம் நீட்டினார்.

“சார், காசெல்லாம் குடுக்குறீங்க... வேண்டா சார்” வாங்க மறுத்தான் ரவி.

“இவ்வளவு தூரம் உதவி செஞ்சிருக்க, அம்பது வெள்ளியாவது வாங்கிக்கோ.”

“அதெல்லாம் வேணாம் சார். நான் உதவி தானே செஞ்சேன்”.

“எதுக்காவது தேவைப்படும் வச்சுக்கோப்பா”.

“கோவிச்சிக்காதீங்க சார். இதெல்லாம் எனக்கு பழக்கமில்ல. செஞ்ச உதவிய மனசார செய்யினோ. அதுக்குக் காசெல்லாம் வாங்கக் கூடாது”.

“எனக்குக் கஷ்டமா இருக்குப்பா. உனக்கு ஏதாவது செய்யணுமே”.

“சார், சொல்றனென்னு தப்பா நெனக்காதீங்க. நீங்க எனக்குத் தான் ஏதாவது செய்யணும்ன்னு இல்ல. யாராவது எப்போவாவது கஷ்டப்படறத பாத்தீங்கன்னா, அவங்க கேக்காமலே போயி உதவி செய்யுங்க”.

“நீ செஞ்ச உதவிக்கு உனக்குத் தானே நான் ஏதாவது செய்யணும்”.

“அப்படி இல்ல சார்.  கவலப்படாம போயிட்டு வாங்க. எனக்கு நேரமாச்சி. நானும் போகணும்”, என்று கூறியவன் அவரிடமிருந்து விடை பெற்றான். மீண்டும் கையின் மணிக்கட்டுக்குச் சரிந்த கடாவை மேல் நோக்கி திருகியவாறு நடந்து சென்றான்.

அந்த கார் பழுது பார்க்கும் கடையை அடைய 10 நிமிடங்களே ஆயின. அதற்குள் சின்னையாவின் மனதில் படக்காட்சிகளைப் போல நொடிகொரு சிந்தனைகள் தோன்றி மறைந்தன. ரவியின் நினைவு அவர் நெஞ்சத்தை விட்டு அகலவில்லை. அலட்டிக் கொள்ளாமல் அவன் நடந்து கொண்ட பாணி சின்னையாவை வெகுவாகக் கவர்ந்தது. கொடுத்தப் பணத்தை வேறு யாருக்காவது கொடுங்கள் என்று சொல்ல எவ்வளவு பெரிய மனம் வேண்டும். மகளை யூனிசெல்லில் பதிய அவர் எடுத்து வந்த ஆயிரம் ரிங்கிட் இன்னும் காற்சட்டை பையிலேயே இருந்தது. பதிவு கட்டணம் செலுத்த நிதியுதவிக்கு விண்ணப்பித்திருந்தார். இன்று காலை பதியும் போது தான் சின்னையாவின் மனு ஏற்கப் பட்டது அவருக்கே தெரிய வர, பதிவு இலவசமானது. சின்னையா அப்படி ஒன்றும் கஷ்டப்படுபவர் அல்ல. இருந்தாலும் வருவதை ஏன் விட வேண்டும். எல்லாரும் தான் வாங்குறாங்க. அரசாங்கம் கொடுக்கும் நிதியுதவி தானே’.

அபாங் கடையில் ஒல்ட்டனேட்டர் மாற்றினார். பசி. உணவுக்கடை அருகாமையில் இருப்பதாக அபாங் வழிகாட்ட, மிகுந்த பசியுடன் அந்த இந்திய கடையை அடைந்தார்.

சிறிய கடைதான். பெயர் பலகை கூட இல்லை. மேசைகள் மடக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒரு மேசையில் மட்டும் ஒரு பெண் அமர்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள். மத்திய வயதுதான். தலைக்கு மேலே ஒரே ஒரு காற்றாடி சுற்றிக் கொண்டிருந்தது.

“என்னம்மா, கடைய மூடிட்டிங்களா”? ஏமாற்றத்துடன் சின்னையா.

“ஆமா அங்கிள்”.

சின்னையாவின் முகம் வாடியது.

“ரொம்ப பசிக்குதா அங்கிள். ஒக்காருங்க, ஏதாவது செஞ்சி தரேன்”. அவள் பேச்சில் ஒரு வெகுளித்தனம் தெரிந்தது.

சின்னையாவுக்கு உட்கார இடம் கொடுத்து அவள் எழுந்தாள். அப்போதுதான் கவனித்தார். கர்ப்பிணி பெண்.

என்ன அங்கிள் சாப்பிடுறீங்க?” கனிவுடன் கேட்டாள்.

தனக்கு இன்று என்ன நடக்கிறது? காலையில் பதிவு இலவசம். கார் பழுதின் போது முன்பின் தெரியாதவரின் உதவி. இப்போது இந்த கர்ப்பிணி பெண்ணின் கனிவான விருந்தோம்பல். சிந்தித்துப் பார்த்த சின்னையா ஒரு கணம் சிலாகித்துப் போனார்.

“ரொம்ப பசிக்குது. எது இருக்கோ குடுங்க மா”. அந்த கர்ப்பிணி பெண்ணுக்குக் கஷ்டம் கொடுக்க விரும்பாதவராய் சின்னையா.

“நல்லா ஒரப்பா மீ கோரேங் போடட்டுமா அங்கிள்”? கடை மூடும் நேரம், வயிற்றில் குழந்தை என எந்த விஷயமும் அவளின் உற்சாகத்தைக் குறைக்கவில்லை. காலையில் கடைக்கு வந்த முதல் வாடிக்கையாளரைக் கவனிப்பது போல் சின்னையாவைக் கவனித்தாள்.

ஐயய்யோ, ஒரப்பு நமக்கு ஆகாது. ஒரப்பு கொறச்சே போடுங்க மா. அப்படியே குடிக்க ஆறுன தண்ணி மட்டும் குடுங்க. வேற ஒன்னும் வேண்டாம்” அவள் கேட்கும் முன்பே முந்திக் கொண்டார்.

“இந்தாங்க தண்ணி குடிச்சிக்கிட்டு இருங்க. அஞ்சி நிமிஷத்தில மீ கோரேங் ரெடி என்று சொல்லிக் கொண்டே உள்ளே போனாள்.

அவள் எழுதி புத்தகத்தின் அடியில் செருகி வைத்திருந்த தாள் காற்றாடியின் காற்றில் ஆடி சின்னையாவின் கவனத்தை ஈர்த்தது. அந்தத் தாளை எடுத்துப் பார்த்தவர், அதைக் காற்றில் பறக்காத வண்ணம் புத்தகத்தின் நடுப் பக்கத்தில் செருகி வைத்தார். சுடச்சுட மீ கோரேங் மேசைக்கு வந்தது. மகிழ்ச்சியாக சாப்பிட ஆரம்பித்தார்.

ஏன் நிக்கிறீங்க? ஒக்காருங்க” கருணையோடு அழைத்தார் சின்னையா. அவள் மறுக்கவில்லை. அசதி போலும்.

“உங்க பேரு என்னம்மா”. சின்னையா பேச்சு கொடுத்தார்.

“புனிதா அங்கிள்”

“இது உங்க கடையா

“இல்லிங்க அங்கிள். என் தம்பி கடை. சும்மா உதவிக்கு வருவேன். தோ இப்ப வந்து கடைய மூடிட்டு என்ன வீட்டுல போயி உட்டுடுவான். மீ கோரேங் நல்லா இருக்க அங்கிள்”? ஒரே கேள்விக்கு மூன்று பதில் கூறி, அவளின் கேள்வியையும் முன் வைத்தாள்.

“உங்க மீ கோரேங்க விட உங்க பேச்சும் உபசரிப்பும் ரொம்ப நல்லாருக்கு மா.” அவர் உள்ளம் நெகிழ்வது குரலில் தெரிந்தது.

“ஆமா அங்கிள், எல்லாரும் அப்படிதான் சொல்லுவாங்க” வெகுளித்தனமாகப் பதில் கூறினாள்.

சாப்பிட்டு முடித்தார் சின்னையா. சாப்பிட்டத் தட்டை உள்ளே எடுத்துச் சென்றாள்.

“எவ்வளவு மா?”

“அஞ்சி வெள்ளி குடுங்க அங்கிள்

தன் மேற்சட்டைப் பையிலிருந்து ஐந்து ரிங்கிட்டை அவளிடம் நீட்டி, “இது மீ கோரேங்க்கு. எப்ப மா பிரசவம்?

“அதுக்கு இன்னும் மூனு மாசம் இருக்கு அங்கிள்”

“நல்லபடி கொழந்தைய பெத்து சந்தோஷமா வாழணும். என் பசிய போக்கின நீ நல்லா இருக்கணும் மா”. மனதார வாழ்த்தி அங்கிருந்து காருக்கு விரைந்தார் சின்னையா.

“மீ கோரேங் தான குடுத்தேன். இதுக்கு ஏன் இப்படி?” என்று முனுமுனுத்தவாறே, மேசையில் இருந்த புத்தகத்தை எடுத்தாள். அந்த புத்தகத்தில் சில ஐம்பது வெள்ளி நோட்டுகள் இருப்பதைக் கண்டுப் பதபதைத்துப் போனாள். சின்னையா சென்ற வழியே பார்த்தாள். கார் புறப்பட்டு விட்டது. நோட்டுகளை எண்ணிப் பார்த்தாள். நானூறு ரிங்கிட். அவள் தனது வீட்டுச் செலவுகளையும் பிரசவச் செலவுகளையும் எழுதி வைத்தத் தாளில் இது உங்களுக்கு. உங்கள் பிரசவ செலவுக்கு என்று எழுதி வைத்திருந்தார் சின்னையா.

புனிதா ஒரு கணம் ஸ்தம்பித்துப் போனாள். பிரசவ செலவுக்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த அவளுக்கு இது ஒரு இன்ப அதிர்ச்சி.

*************************

“மாமா.... மாமா” தன் கணவனைக் கூப்பிட்டுக் கொண்டே வேக வேகமாக வீட்டிற்குள் வந்தாள் புனிதா.

“மெதுவா.. மெதுவா. ஏன் இந்த அவசரம்? புனிதாவின் கணவன் கரிசனத்தோடு வரவேற்றார்.

“இன்னைக்கு ஒரு மீ கோரெங்க நானூறு வெள்ளிக்கு வித்தேன், தெரியுமா உங்களுக்கு”? உற்சாகத்தின் உச்சியில் இருந்தாள் புனிதா.

“என்னடி சொல்ற? பைத்தியமா ஒனக்கு”?

“எனக்குப் பைத்தியமா? தோ பாருங்க” கையிலிருந்த ஐம்பது ரிங்கிட் நோட்டுகளைக்  கணவனிடம் நீட்டினாள் புனிதா. நடந்தவற்றை எல்லாம் விளக்கிக் கூறினாள்.

ஆச்சரியப்பட்டுப் போனார் புனிதாவின் கணவன். பெருமிதத்தோடு, கையின் மணிக்கட்டில் இருந்த கடாவைத் மேல் நோக்கி இழுத்து திருகி விட்டு, அவளை அப்படியே அணைத்துக் கொண்டார்.


Comments

  1. சிறுகதையின் தலைப்பும் கதையை முடித்த விதமும் மிகச் சிறப்பு, ரமேஷ்.
    வாழ்த்துகள்.
    எஸ்.அண்ணாமலை,
    பீடோங், கெடா.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

எலி - யோகாம்பிகை இளமுருகன்

சமம் - சுமத்ரா அபிமன்னன்