எலி - யோகாம்பிகை இளமுருகன்

 CLUBHOUSE-இல் வாசிக்கப்படவிருக்கும் சிறுகதை (24.11.2021)


நான்கு திசைகளிலும் பொத்துக் கொண்டு வந்தது அந்தச் சத்தம். ஒரே ஒரு மங்கிய குண்டு பல்பின் சத்தம் சிறுவயது முதலே பழகிப்போன தாலாட்டுப் போல் அமைந்திருந்தது. மூன்று கால் காற்றாடியின் எண்ணெய் ஊற்றாது கரைப்பிடித்துக் கிடந்த வயர்களின் அசைவு சத்தம் கீச் கீச்சென கிழித்தது நெஞ்சை. பல நாள் அக்காற்றாடியுடன் போராடியும் அச்சத்தம் நிற்கவில்லை; வயர்கள் அறுந்து மிச்சம் மீதி இருந்த தெம்பினால் ஈடுக்கொடுத்துச் சுழன்றுக் கொண்டிருந்தது. கடிகார முட்களின் 'டக் டக் சத்தம்'. ‘கீச் கீச்’ எலிகலின் விடாத சத்தம். அதுவும் சில காலமாய்ப் பழக்கப்பட்டுப் போனது. பக்கத்து வீட்டின் நாயின் சத்தம். சன்னலுக்கு அருகில் கூடு கட்டியிருந்த சிட்டுக் குருவிகளின் சத்தம். இளசுகளின் மோட்டார் வண்டியின் உறுமல் சத்தம். இம்சை தரும் இவர்களும் எலிக்கூட்டத்தின் ஒரு சில்லுகளே! இதை விடக் கொடுமை எந்நேரமும் பக்கத்து அபார்ட்மெண்டில் வீடு கட்டும் பணியில் எழும்பும் இடியைப் போன்று நெஞ்சை அதிரவைக்கும் பெருஞ்சத்தம். எல்லா சத்தங்களும் கூடி காதுகளில் ஊடுருவி மூளையின் நரம்பிற்குச் சூடாய் வலியின் வேதனையைக் கொப்பளித்தது. ஆடாமல் அசையாமல் காது கொடுத்துச் சத்தத்தைக் கேட்பான் அருளி அவனின் அகன்ற எலிக் காதால்.

ஒற்றைத் தேய்ந்த பல்பின் ஒளியில் காலத்தை ஓட்டுவானவன். இருளும் சத்தமும் அவனுக்கு மிக நெருக்கமானவை. அதிலேயே ஊறி ஊறி வெளியே செல்ல முற்படாமல் இருளைத் தேடி அலைவான். எலிப் பொறியில் சிக்குண்ட எலியாய் இவன் தவிக்கிறான்!

"ஏன்டா அருளி, அப்படி என்ன சோம்பேறி ‌உனக்கு? சாமி விளக்கக் கூட ஏத்தாம இருட்டிலே இருக்க? பாரு எலி சாமி விளக்கத் தள்ளி விட்டிருக்கு. நான் இல்லாத அப்போ அசம்பாவிதம் நடந்திருந்தா என்ன ஆகுறது?" கரித்துக் கொட்டிக்கொண்டே வீட்டின் அனைத்து விளக்குகளையும் தட்டிவிட்டாள் மல்லிகா. வானம் மப்பும் மந்தாரமுமாக அனைவரின் சோம்பேறி தன்மைகளையும் வெளியில் தட்டி எழுப்பிக் கொண்டிருந்தது. கூடவே இருள் சூழ்ந்து அன்றைய பொழுதானது இருட்டத் தொடங்கிக் கொண்டிருந்தது. யாராக இருப்பினும் இரவில் இருட்டிலா அமர்வது? மல்லிகா கத்துவது இன்று நேற்றல்ல. தினம் தினமும் அவர்களின் வீடு மட்டும் அமாவாசையைப் போல் இருள் சூழ்ந்திருக்கும். மல்லிகா வரும் வரை!

வீட்டின் அனைத்து விளக்குகளையும் தட்டினாள். “சாமிக்கு வச்ச பொரி உருண்டைய தூக்கிட்டுப் போச்சு எலி,” சலித்துக் கொண்டே சாமி அறையிலுள்ள விசையை அழுத்த, அது வேகமாகக் கந்த சஷ்டி கவசத்தைக் கக்கியது. இரு கைகளையும் காதில் வைத்து அடைத்துக் கொண்டு தலை தெறிக்க அறையை நோக்கி ஓடுவான். எப்போதும். "சாமி பாட்டெல்லாம் கேட்காதே. திருந்திட்டீனா?" தலையில் அடித்துக் கொண்டே வேலையைத் தொடர்ந்தாள்.

"மல்லிகா மா, இந்த அப்பார்ட்மெண்ட் கடைசி வீட்டுல அன்னாடிக்கும் ராத்திரி, பகலெல்லாம் குலைக்கிர நாய் இன்னிக்குச் செத்துப் போச்சு. யாரோ அதோட சாப்பாட்டுல எலி மருந்தைக் கலந்துட்டாங்கனு எல்லாரும் பேசிக்கிறாங்க," நெஞ்சில் அடித்துக்கொண்டே கதையை அப்படியே கொப்பளித்துத் துப்பினாள். அவளும் ஒரு விசுவாசக்காரன் ஒருத்தனை வளர்க்கிறாள் அல்லவா. பதற்றமும் பயமும் மேலோங்கி முகத்தில் படர்ந்திருப்பதை உணர முடிந்தது மல்லிகாவுக்கு.

"அடக்கடவுளே, ஒரு உயிரை எடுப்பதற்கு இந்த உலகத்தில யாருக்குமே அனுமதி இல்லை! பாவம் அந்த நாய் என்ன பண்ணுச்சு," தாயுள்ளம் பதறியது.                                            கற்பகம் மீண்டும் தொடர்ந்தாள். "பிள்ளைய வெளிய விட்டுடாதீங்கெ மா. நம்ப அப்பார்ட்மெண்டில் அன்னாடிக்கும் என்ன நடக்குதுன்னு தெரியல," அருளியின் மேல் கரிசனம் காட்டினாள். தன் பிள்ளைகளை விட அருளின் மேல் அவ்வளவு பாசம் அந்தப் பக்கத்து வீட்டுக் கற்பகத்துக்கு.

"நீதான் மெச்சுக்கணும் அருளிய. முதல்ல அவனக்கு ஒரு கோயிலுக்குப் போய் மந்திருக்கணும். எப்ப பாரு இருட்டிலேயே உட்கார்ந்து இருக்கான். கொஞ்சம் வேகமாகக் கத்திப் பேசிட்டாலோ இல்ல ஏதாவது சத்தம் கேட்டாலோ உடனே காதப் பொத்திக்கிட்டே ஓடி விடுவான்," புலம்பி தன் மகளுக்கு ஒரு விடிவுகாலம் பிறக்காதா என்று தவித்தாள். வீட்டிற்குள் சென்றே குங்குமத்தை எடுத்து வந்து நீட்டினாள் கற்பகம்."இந்தாங்க மல்லிகா மா.காளி கோயிலுக்குப் போயிருந்தேன். இந்தக் குங்குமத்தை அருளிக்கு வச்சிவிடுங்க. நல்லதே நடக்கும்," கூறிவிட்டு நடையைக் கட்டினாள்.

"அருளி, இந்தக் காசைப் பிடி. கீழ இருக்கிற கடைக்குப் போயி புளி, மஞ்சள் தூள், அப்படியே எலி மருந்து வாங்கிட்டு வா. போன மாசம் சம்பளத்தில வாங்குன கோதும மாவு, ஆட்டா மாவு எல்லத்தையும் கடிச்சி வச்சிருச்சி எலி. என் சம்பளத்தை இப்படியே கரச்சிரும் போல. இந்த வீட்டில் அடிக்கடி எலி தொல்லை தாங்கவே முடியல," காசையும் கொடுத்துக் கூடவே குடையையும் கொடுத்து அனுப்பிவிட்டாள். சொட்டுச் சொட்டாய்ப் பெரிய பெரிய மழைத்துளிகள் விழுவதின் சத்தம் சற்று அதிகமாகவே கேட்டது‌.

"மா, கடைக்கு நான் போல. நீங்களே போயிட்டு வாங்க. கீழ் வீட்டில் இருக்கிற அண்ணன்கள் எல்லாம் என்னைய தொந்தரவு செய்றாங்க. அவங்க மோட்டர்சைக்கிள் சத்தம் என் காது வலிக்குது," அம்மாவிடம் முரண்டு பிடித்தான் அருளி. மல்லிகா ஒரு பார்வையை நோக்கினாள். அடுத்து அடி விழுவதற்குள் சென்று ஓடிவிடுவோம் என்று ஒன்றும் பாதியுமாகச் செருப்பை அணிந்து கொண்டு தரதரவென்று நடந்தான்.

"கற்பகம், அருளிய கீழ இருக்கிற பாய் கடைக்கு அனுப்பினேன். ரொம்ப நேரமாச்சி அவன் போயி இன்னும் வரல. அந்த ரவுடிங்க என் பையன என்னா பன்றானுங்கனு தெரில. எலி தொல்லை வீட்டில: இவனுங்க தொல்ல இந்த அப்பார்ட்மெண்டில. பயமா இருக்கு மா," கைகள் வெடவெடக்க பதற்றமாய்க் கற்பகத்திடம் நடந்ததை ஒப்புவித்தாள். அருளி ஏற்கனவே பயமாய் இருக்கிறது என்று சொல்லிவிட்டுத்தான் போனான். அவனின் வார்த்தைகள் இன்னும் அவளின் நெஞ்சத்தைப் பயத்தால் அமிழ்த்தியது.

தடதடவென வேகமாக ஓடிவரும் சத்தம் கேட்டு இருவரும் திரும்பிப் பார்த்தனர். ஆம்! அவன் அருளியே. முழுவதுமாய் நனைந்து, சட்டை எல்லாம் கிழிந்து, செருப்பை ஒன்றும் பாதியுமாக மாற்றிப் போட்டுக் கொண்டு ஓடி வந்தான்‌. அவன் கையில் அம்மா வாங்க சொன்ன அனைத்துப் பொருட்களும் இருந்தன. எலி மருந்தைத் தவிர. மல்லிகா எவ்வளவு கேட்டும் அவன் பதில் எதுவும் சொல்லவில்லை. அவன் குளித்து விட்டு வந்ததும் தலையை துவட்டி விட்டாள். அப்படியே உறங்கிப் போனான் அருளி‌.

அன்றிரவு அந்த அப்பார்ட்மெண்டே பரப்பரப்பானது. மீண்டும் நம் கற்பகம் வந்தாள்." விஷயம் தெரியுமா மா? கீழ் வீட்டுக் கதிரேசன் உடம்புக்கு முடியாம ஹாஸ்பிடலுக்குக் கூட்டிட்டுப் போயிருக்காங்க. அவன் ஏதோ எலி மருந்து கலந்த சாப்பாடு சாப்பிட்டுட்டானு டாக்டர் சொன்னாராம்," கற்பகம் மல்லிகாவை அச்சுறுத்தினாள்.

      இந்த அப்பார்ட்மெண்டில் நடக்கின்ற ஒவ்வொன்றும் மர்மமாகவே இருக்கின்றது என்பதை உணர்ந்தாள் மல்லிகா. அப்படியே மண்டையில் போட்டு யோசித்தவாரு சன்னலைத் திறந்து காய்ந்த துணிகளை எடுக்கச் சென்றாள். சிறுக சிறுக சேர்த்துக் கட்டிய சிட்டுக் குருவியின் கூடு பீய்த்து அலங்கோலமாய்க் கிடந்தது. அதிலிருந்து வாயில்லா உயிர்கள் இரத்தம் தெரித்து மரணத்தின் விளிம்பில் தவித்துக் கொண்டிருந்தன. அப்படியே சத்தமாய்க் கத்திக் கூச்சலிட்டாள். “ஒரு வேள இது எலி பண்ண வேலையா இருக்குமோ?” கருணையும் கரிசனமும் பயமும் கலந்த ஓர் உணர்வு. இதில் கண்ணுக்குத் தெரியாமல் ஏதோ ஒரு மர்மம் அவர்களைச் சுற்றி நிகழ்கிறது என்பதைத் தெரிந்தும் அதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்றும் குழம்பிப் போனாள்.

      பதறியடித்துக்கொண்டு கற்பகம் மீண்டும் மல்லிகாவிடம் ஓடிவந்தாள். "மல்லிகா மா, அந்த ரவுடி கதிரேசன் செத்துப் போயிட்டானாம். பாவம் அவங்க அம்மா அப்பா அழுதுகிட்டே இருக்காங்க. அவன் செத்துப் போய்விட்டான் என கவலைப்படுவதா இல்லை. இனி அவனோட மோட்டார்சைக்கிள் சத்தம் நம்ம காதைப் பிழக்காதுனு சந்தோசப்படுவதா தெரியல. அவன் கூட இருந்த மத்த ரவுடிங்க எல்லாம் நண்பன் போயிட்டானே கவலையிலும் அடுத்து எவன் போக போகிறானோனு பீதியில இருக்கானுங்க," மூச்சிரைக்க கூறி முடித்தாள் கற்பகம். மல்லிகா தலையில் அடித்துக்கொண்டு பதறினாள். என்னதான் இறந்தது வேறொருவரின் பிள்ளையாயினும் அதே இடத்தில் தன் மகன் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என வருத்தம் தலை விரித்தாடியது.

      கற்பகத்திடம் பேசி முடித்துவிட்டு எலிப் பொறியை வைத்தாள். கதவைத் தாழ்ப்பால் இட்டுப் பூட்டி வீட்டின் அனைத்துச் சன்னல்களையும் சாத்தினாள்.

      "பிள்ளைக்குக் காத்துச் சேட்டை அடிச்சிருக்குப் போல," சாமி அறையில் காளியை வணங்கி கொண்டு குங்குமத்தை எடுத்து அருளியின் நெற்றியிலிட்டாள். பயந்து மழையில் நனைந்து களைப்பில் கண்ணுறங்கும் அருளியின் தலையைக் கோதி விட்டாள்.

      கண்ணிமைகள் நீண்டு வளர்ந்து இருந்தன. வாய்பிளந்து அவன் வாயின் ஓரம் இலேசாக வழியும் எச்சில். காற்றில் அசையும் அவனின் தலை முடி. இருட்டிலே ஒளிந்துக்கொண்டு மற்றவரைக் கண்டு பயந்து நடுங்கும் இவனும் ஒர் எலிதானே!

      நெற்றியில் இருந்து புருவம் வரை அதே பயத்தின் அடையாளம். இப்பொழுது அருளியின் அடையாளம் நன்கு தெரிகிறது. அதிகச் சத்தத்தின் வெளிப்பாட்டில் எழுந்த பயத்தால் விபத்தடைந்தான். பெற்ற மகனை இரசிக்க கூட நேரம் இல்லாமல் வேலை வேலை என ஓடிக்கொண்டு உழைக்கும் தாயின் மனம் பிள்ளைக் கூடவே இருந்து விட மாட்டோமா என்ற ஏக்கத்தின் வெளிப்பாடு. அருளி அனைத்திற்கும் பயப்பட தான்தான் காரணம். தனியே விடுவது தன் தவறுதான். அவனை மருத்துவரிடம் கொண்டுச் செல்ல பணமும் இல்லை. மற்ற வீட்டுக் குழந்தைகளுக்கு இப்படியொரு பிரச்சனையை தான் கண்டதில்லையே என வருந்தினால். இனி அவன் பயமில்லாமல் இருக்க வேண்டும் என காளியை வேண்டிக் கொண்டு குங்குமத்தையிட்டாள். அப்படியே உறங்கிப் போனாள் மல்லிகா.

      பெருத்த இடியுடன் மழை. களைத்து, உழைத்து, அளுத்துப் போன அவர்களுக்கு இந்த மழை நல்ல உறக்கத்தைக் கொடுத்தது. காலையில் விடிந்த உடனேயே மீண்டும் வந்தாள் கற்பகம். "மல்லிகா மா, இன்னிக்கும் அதே இறப்புச் செய்தி தான்," ஒருவித அதிரும் குரலில் கவலையின் பிடியில் வார்த்தைகள் தட்டுத்தடுமாறி வெளிவந்தன கற்பகத்திற்கு.

      ஒரு கணம் மல்லிகா வீட்டைத் திரும்பிப் பார்த்தாள். அங்கு அவனது செல்ல மகன் உறங்கிக் கொண்டிருந்தான். நிம்மதி! சரி யார் இறந்திருப்பார்?எதற்குத் தொடர்ந்து கொலைகள் நடக்கின்றன? பார்வையை நோக்கினாள் கற்பகத்தின் மேல். எலிப் பொறியில் ஒரு எலி சிக்கியிருந்தது.

      "நம் பக்கத்து அபார்ட்மெண்டில் வேலை செஞ்ச ஒரு வேலைக்காரன் எலி கலந்த சாப்பாடு சாப்பிட்டுச் செத்துப் போயிட்டான்! இது தற்கொலை அல்ல! நிச்சயம் கொலைமுயற்சியாத்தான் இருக்கும் மா. நீங்க பாருங்க இப்ப சாகர எல்லாருமே எலி கலந்த சாப்பாடு சாப்பிட்டுட்டுச் சாகுறாங்க," சதி என சரியாகக் கண்டுபிடித்தாள் பக்கத்துவீட்டுக் கற்பகம்.

      "ஆமா கற்பகம் நீ சொல்றது சரிதான். என்னோட பையனைத் தனியா விட்டுட்டு வேலைக்குப் போறதுக்குக் கூட பயமா இருக்கு. முகம் தெரியாத யாராவது சாப்பாடுக் கொடுத்தால் என்ன ஆகிறது," ஒற்றைப் பிள்ளை ஆயிற்றே; பதறாதா தாயின் உள்ளம்?

      வேலைக்குக் கிளம்பினாள் மல்லிகா. சம்பள நாள் அன்று. இதற்கு முன்பு வாங்கிய முன்பணத்தைக் கழித்துக்கொண்டு மீதம் இருப்பதில் சம்பளக் கணக்கை முடித்தார்கள் அங்கு. "சம்பளம் கொடுக்க கை வருதா பாரு," பலரின் முனகல் சத்தமது. பணத்தை வாங்கிக்கொண்டு கடனை அடைப்பதை நினைக்காமல் பிள்ளைக்குப் பிடித்ததை வாங்கித் தருவோம் என்று நினைத்துக்கொண்டே சென்றாள். அவனுக்காக ஒரு சட்டையை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு விரைந்தாள்.

கிழிந்த எலி மருந்தின் பொட்டலம் அருளியின் சட்டைப் பாக்கெட்டில் விழும் நிலையில் தொங்கிக்கொண்டிருந்தது. கடிகார முட்களின் 'டக் டக் சத்தம்' நின்று இரவு மணி 9.03-இல் கண்ணாடி நொறுங்கப்பட்டுக் காண்பித்திருந்தது. அந்தக் கீச் கீச் சத்தங்கொண்ட காற்றாடியின் கழுத்திலிருந்து நாக்கு வெளியே தள்ளப்பட்டு மனித எலி ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. இனி எங்கும் சத்தம் கேட்காது அல்லவா

 


Comments

Popular posts from this blog

சமம் - சுமத்ரா அபிமன்னன்

கடா – AK ரமேஷ்