வீரபாண்டிய கட்டபொம்மன் - உமாதேவி வீராசாமி


 CLUBHOUSE-இல் வாசிக்கப்படவிருக்கும் சிறுகதை (10.11.2021)


 உற்சாகத்தின் எல்லையைக் எட்டிப் பிடித்துக் கொண்டிருந்தது என் பள்ளி. கூடுதலான அலங்காரங்களோடு கம்பீரமாய்க் காட்சியளித்த பள்ளிக்குச் சுற்றிப்போட வேண்டுமென மனம் குழந்தைத்தனமாய் எண்ணியது. மாணவர்களின்  ஆரவாரத்தைச் சொல்லவா வேண்டும். ஆர்ப்பாட்டமாய் அங்கும் இங்கும் ஓடிக் குதூகலித்துக்கொண்டிருந்த அவர்களைப் பார்த்ததும் என் மனதிலும் மகிழ்ச்சி தொற்றிக்கொண்டது. பள்ளி வளாகத்தில் ஆங்காங்கே குழுமி நின்று, கதை பேசிக்கொண்டிருந்த பெற்றோர்களின் ஆவலையும் அளவிட்டுச் சொல்ல முடியவில்லை. அவர்கள் முகத்திலே பேரானந்ததிற்கான அறிகுறிகள் அப்பட்டமாய் ஒட்டிக்கொண்டிருந்தன. எதிர்பார்ப்புகளும் எக்கச்சக்கமாய்த் தெரியவே செய்தன. தங்கள் பிள்ளைகளின் திறமைகளைக்  கண்டு களிக்கும் வாய்ப்பு வருடத்திற்கு ஒரு முறைதானே கிடைக்கிறது.

எனக்குள்ளும் பட்டாப்பூச்சிகள் பறந்துகொண்டுதான் இருக்கின்றன. என் கால்கள் தரையில் நிற்க மறுப்பதை என்னால் உணர முடிந்தது. எத்தனை நாள் உழைப்பு இது. செந்தமிழ் விழா என்றாலே வருடந்தோறும் இப்படித்தான் இருக்கும் என்றாலும் அனைவரது ஆர்வமும் ஆரவாரமும் குறைந்தபாடில்லை. சிறு பள்ளியாக இருந்தாலும் செய்யும் நிகழ்ச்சிகள் தரமாக இருக்க வேண்டும் என்பதில் எங்கள் தலைமையாசிரியர் உறுதியாகவே இருப்பார். ஆசிரியர்களின் செயலிலும் தலைமையாசியரின்  சாயலைப் பார்க்க முடிந்ததை நான் உணரத் தவறவில்லை.  தலைமையாசிரியர் குணம் அறிந்து செயல்படும் ஆசிரியர்களைப் பெற்றது பள்ளியின் பாக்கியம்.  அதனால்தான் என்னவோ பெற்றோர்கள் மத்தியில் எங்கள் பள்ளிக்கு நல்ல மரியாதை உண்டு.

 

சட்டமன்ற உறுப்பினர் வந்துவிட்டால் அடுத்த நிமிடமே செந்தமிழ் விழா தொடங்கி விடும்.

நிகழ்ச்சி தொகுப்பாளர் அறிவிப்புச் செய்ய, அனைவரும் மண்டபத்தில் தங்கள் இருக்கையைத் தேடி அமரத் தொடங்கி விட்டனர். முதல் வரிசையில் இடம் கிடக்காததால் சிலர் முகங்களில் வருத்தம் இழையோடியதைப் பார்க்க முடிந்தது.   அதற்கான காரணமும் புரிந்தது. ஆனால், என்ன செய்ய முடியும்? சிறப்பு விருந்தினர்களும் பெற்றோர் ஆசிரியர் சங்கச் செயலவை உறுப்பினர்களும் அங்கே அமர்த்தப்பட்டிருந்தனர். முதல் வரிசை அவர்களுக்கானது. யார் எழுதிய சட்டம். பதில் தெரியவில்லை.

இந்தச் செந்தமிழ் விழாவிற்காகப் பள்ளியே முழுமூச்சாய்ச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. நான்கு வாரங்களுக்கு முன்பு ஐந்தாம் ஆண்டு மாணவர்களுக்குத் தமிழ்மொழிக் கட்டுரை போதித்துத் கொண்டிருந்தேன். அந்நேரம் கைப்பேசி ஒலிக்க அதனை எட்டிப் பார்த்தேன். தலைமையாசிரியர் அழைப்பு அது. பாட நேரத்தில் கைப்பேசி அழைப்பை எடுக்கக்கூடாது என்ற கொள்கையைக் கெட்டியாகப் பிடித்திருப்பதால்,  அதை அப்படியே விட்டு விட மீண்டும் கைப்பேசி ஒலித்தது. மாணவர்களிடையே சலசலப்பு. என் தவறுதான். பொதுவாக சைலண்ட் மோட்டில் கைப்பேசியை வைத்திருக்கும் நான் அன்று ஏனோ மறந்துபோனேன்.

வகுப்பு முடிய ஒரு சில நிமிடங்களே இருந்ததால், வகுப்பை முடித்துவிட்டு தலைமையாசிரியரைச் சந்திக்க தீர்மானித்தேன். மணி அடித்ததும் தலைமையாசிரியர் அறையை நோக்கி நடந்தேன்.

 

வழக்கம்போல் தலைமையாசிரியார் கோப்புகளுள் மூழ்க்கிக் கிடக்க, அவர் அறைக்கதவைக் கவனத்துடன் தட்டினேன். கோப்பில் இருந்த அவரது தீவிரம் என் மீது பதிந்தது.

“வணக்கம் டீச்சர். உள்ள வாங்க,”

“வணக்கம் சார் என்னை மன்னிக்கனும். வகுப்புல இருந்தன்..தால உங்...க  போனை எடுக்கல” குற்ற உணர்ச்சியும் வருத்தமும் கலந்து வார்த்தைகள் தட்டுத்தடுமாறி வெளிவந்தன.

“அதனால் என்ன, பரவாயில்ல டீச்சர். வகுப்பில் இருக்கீங்கன்னு தெரியாம நான்தான் போன் பண்ணிட்டேன், நீங்கதான் மன்னிக்கனும்

போன உயிர் திரும்பி வந்தது எனக்கு.

“டீச்சர் இன்னும் ஒரு மாதத்தில நம்ம பள்ளியில செந்தமிழ் விழா நடக்கப்போகுது. வழக்கம்போல நீங்கதான் நாடகப்போட்டிக்குக் பொறுப்பெடுத்துக்கணும். மறுக்க மாட்டீங்கன்னு நம்பறன்”

“மறுக்க ஒன்னுமில்லைங்க சார். எனக்குப் பிடிச்ச விசயம் இது. கட்டாயம் செய்றன்”

“ம்ம்ம்ம்....சரிங்க டீச்சர்.  ரொம்ப நன்றி”

தலைமையாசிரின் பணிவான வார்த்தைகள் மனத்திற்கு ஆறுதலைத் தந்தன. கடந்த இரண்டு ஆண்டுகளாக நான்தான் நாடகத்திற்குப் பொறுப்பெடுத்து வருகிறேன். நாடகம் என்றாலே அதற்கென ஒரு இரசிகர் கூட்டம் உண்டு. இந்த இரசிகர்களைத் திருப்திபடுத்துவதில் எனக்கு அப்படியொரு மகிழ்ச்சி. என் மூளை சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கியது. ஆசிரியர் அறைக்குச் சென்றேன்.

என் அருகில் இருக்கும் கலை டீச்சரை எட்டிப் பார்த்தேன். மடிக்கணினியில் ஏதோ செய்து கொண்டிருந்தார். பள்ளி வேலைகளைத் தவிர வேறு என்னவாக இருக்கக்கூடும்.

“கலை டீச்சர், வேலையா இருக்கீங்களா?”

தன் மூக்குக்கண்ணாடியை அதன் இடத்தில் சரியாக உட்கார்த்திவிட்டு இரு புருவங்களையும் உயர்த்தி என்னைப் பார்த்தார் கலை டீச்சர்.

“வேலை முடியிற கட்டந்தான். என்ன விசயம் சொல்லும்மா.”

அவரைப் பார்க்க ஒரு பக்கம் பரிதாபமாக இருந்தது. வயதுக்கு மீறிய முதிர்ச்சி. வேலைப்பளுவின் தாக்கமாக இருக்குமென நானே தீர்மானித்துக் கொண்டேன்.

“செந்தமிழ் விழா வருது. நாடகம் தயார்ப் பண்ணனும்”

“சரி... நான் என்ன செய்யனும்னு சொன்னா, செய்யறன்”

வயதுக்கும் தோற்றத்திற்கும் சம்பந்தமில்லாத ஒரு புத்துணர்ச்சியை அவர் கண்களில் நான் பலமுறை பார்த்ததுண்டு. வேலைக்கு அஞ்சாதவர். அவரது செயல்பாடுகளைக் கண்டு நான் பல தருணங்களில் பிரமித்துப் போனதுண்டு. பாராட்டியதும் உண்டு.

“என்ன நாடகம் போடலாம்னு ஐடியா கொடுங்க டீச்சர், ரெண்டு வருசம் சமூக நாடகம் போட்டாச்சு. இந்த வருஷம் என்ன நாடகம் போடலாம்?”

“வீரபாண்டியன் கட்டபொம்மன். ஓ.கே.தானே!” என்று சொல்லிவிட்டுக் கிண்டலாய்ச்ச் சிரித்தார் கலை டீச்சர்.

“ஓ...போடலாமே...” உற்சாகமாகிப் போனேன் நான்.

“ஏய் பொன்னு! நான் விளையாட்டா சொன்னா, சீரியசா ஆமாம் சொல்றீயே! அந்த நாடகத்துக்கு நிறைய பயிற்சி வேணும். ரொம்ப கஷ்டப்படனும்,” அக்கறையும் அன்பும் கலந்த குரலில் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் கலை டீச்சரை. அவரை ஆர்வத்தோடு பார்த்தேன்.

“செஞ்சிடலாம் டீச்சர். ஐடியாவுக்கு நன்றி,” உற்சாகத்தின் அளவு கூடிக்கொண்டே போனது.

“இந்த ஆண்டும் செந்தமிழ் விழாவை அமர்க்களப்படுத்திவிட வேண்டும்,” மனம் சொன்னது.

வீரபாண்டிய கட்டபொம்மன். பல முறை பார்த்து இரசித்த படம். இப்படத்தில் செவாலியே சிவாஜி கணேசனின் அபரீமிதமான நடிப்பைப் பார்த்துக் காதல் கொண்டேன் என்றே சொல்ல வேண்டும். நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் என்ற முண்டாசு கவிஞனின் எழுத்திற்கு உரு கொடுத்த பெருமை, நடிகர் திலகம் சிவாஜியையே சாரும்.  நினைக்கும்போதே உடம்பெல்லாம் சிலிர்த்துக்கொண்டது.

கட்டபொம்மன் படத்தின் சில பகுதிகளை மட்டுமே எடுத்து நாடகம் படைக்கலாம் என முடிவுக்கு வந்தேன். அடுத்து நடிகர் தேர்வு.  இந்த ஆண்டு ஐந்தாம் படிவ மாணவர்களுள் சிலர் மனக்கண்ணில் வந்து போயினர். தமிழரசன், பெயருக்கு ஏற்றாற்போல தமிழ்மொழியில் அரசனாகவே இருந்தான். அவன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் மிகப் பொருத்தமாய் இருப்பான். மனம் முடிவு செய்தது. அடுத்து எட்டப்பன். இதற்குக் கண்ணன் சரியாய் இருப்பான். அவன் குறுகுறு பார்வை நினைவுக்கு வந்தது. எனக்குள் சிரிப்பும் சேர்ந்தே வந்தது. தொடர்ந்து ஜாக்சன் துரை. சரியான ஆளாக எடுக்காவிட்டால் நாடகம் சொதப்பல்தான். லிங்கம் பொருத்தமாய் இருப்பான் எனத் தோன்றியது. நல்ல உயரம். சிவந்த மேனி. சந்தேகமில்லை, அவன்தான் இதற்கு மிகப் பொருத்தமானவன். அடுத்து அமைச்சர், அரசி, பணியாள் எனப் பட்டியல் போட்டு வைத்துக் கொண்டேன். அன்று மதியம் அவர்களையெல்லாம் சந்தித்து விசயத்தைச் சொல்லி விட வேண்டுமெனத் தீர்க்கமாய் முடிவெடுத்தேன். அப்படியே செய்தேன்.  

“இன்னைக்கே வேலையைத் தொடங்கிடனும்” மனம் உத்தரவிட்டது. பாட நாட்குறிப்பு வேலைகளைப் பள்ளியிலே முடித்துவிட்டேன். என்றும் இல்லாத உற்சாகம் என்னைத் தொற்றிக் கொண்டது. வீடு திரும்பினேன். வழக்கப்போல் வீட்டு வேலைகளில் அம்மாவிற்கு உதவியாக இருந்து விட்டு நாடகத்திற்காகச் செய்ய வேண்டிய வேலைகளைக் கவனமாய்ப் பட்டியலிட்டுக் கொண்டேன்.  மனமெல்லாம்  வீரபாண்டியன் கட்டபொம்மன்தான் நிறைந்திருந்தார். இரவு உணவைச் சீக்கிரமே முடித்துவிட்டு என் அறைக்குள் தஞ்சம் புகுந்தேன். படத்தைப் பார்த்தேன். தேவையான வசனங்கள் எழுதத் தொடங்கினேன். விடியற்காலை மூன்று மணிக்கு வசனம் எழுதும் வேலை வெற்றிகரமாய் முடிந்தது.

“சபாஷ்! சூப்பர் கனகம்! உன்னால் மட்டும்தான் இது முடியும்,” இல்லாத காலரைத் தூக்கி விட்டுக் கொண்டேன். உதட்டின் ஓரத்தில் தற்பெருமைக்கு அடையாளமாய் ஒரு புன்சிரிப்பு அதுவாய் வந்து போனது.

மறுநாள் தமிழ்மொழிப் பாடவேளையில் நாடகத்தைப் பற்றி கொஞ்சம் தொட்டுப்பேசி, நகல் எடுத்து வந்த வசனத்தாள்களை மாணவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தேன். நடிக்கத் தேர்வு பெற்ற மாணவர்கள் முகத்தில் உற்சாகத்திற்குப் பதிலாகப் பயம் படரத் தொடங்கியது. காரணம் புரிந்தது.

“ஏன் பயப்படறீங்க? நம்ம நாடகத்த பார்த்து ஊரே பாராட்டப்போது பாருங்க.” நம்பிக்கை வார்த்தைகளைத் தாராளப் பிரபுவாய் அள்ளித் தெளித்தேன். தொடர்ந்து வெண்பலகையில் அன்றைய பாடத்தலைப்பை எழுதத் தொடங்கினேன்.

“டீச்சர்....” தயக்கத்துடன் யாரோ கூப்பிட திரும்பிப் பார்த்தேன்.

“யார் கூப்பிட்டது?

பதில் இல்லை.

மீண்டும் வெண்பலகை பக்கம் திரும்ப முயன்றேன்.

“டீச்சர்...”

அதே குரல். மீண்டும் திரும்பினேன்.

“யார் அது?”

“டீச்சர், கோபால்தான் கூப்பிட்டான். உங்ககிட்ட என்னமோ கேட்கனுமா,” சத்தமாய்ச் சொன்னான் கடைசி வரிசையில் அமர்ந்திருந்த மதி.

“என்ன கோபால்... என்ன கேட்கனும்?

“ஒன்னுமில்ல டீச்சர்.”

“ஒன்னுமில்லாம எதுக்குக் கூப்பிட்ட?” என் கேள்வியால் சற்றே மிரண்டு போனான் கோபால்.

“அது வந்து... அது வந்து

சீக்கிரம் சொல்லு கோபால். பாடம் நடத்தனும். நேரமாகுது இல்லையா,” கோபம் வெளியே தெரியாமல் பார்த்துக்கொண்டேன்.

“டீச்சர்.. நாடகத்...தில நா.னு..ம் நடிக்கலாமா?  அவன் கேட்டு முடிப்பதற்குள் வகுப்பில் சிரிப்பலை பெரிதாய் எழுந்து அடங்கியது. வகுப்பை அடக்க முயற்சித்தேன்.

இவனுக்கு என்ன பதில் சொல்வது. கடைநிலை மாணவன், வாசிப்புத் திறன் குறைவு. இவன் எப்படி. மனம் குழப்பத்தில் ஆள என்னைச் சுதாகரித்துக் கொண்டேன்.

“கோபால்... அடுத்த வருசம் பார்க்கிறன். இந்த நாடகத்தில வசனமெல்லாம் கஷ்டமா இருக்கும்,” சொன்னதும் அவன் முகம் வாடிப்போனது. வழி தெரியாமல் பாடத்தைத் தொடர்ந்தேன்.

இரண்டு நாட்கள் வசனத்தை மனனம் செய்ய கால அவகாசம் கொடுக்க, மாணவர்கள் மூன்றாவது நாள் பள்ளி முடிந்து மண்டபத்தில் நாடகப் பயிற்சிக்காக ஒன்றுகூடினர். கோபாலும் வந்திருந்தான்.

“கோபால், நீ ஏன் வீட்டுக்குப் போகல?

அவனிடமிருந்து பதில் வரவில்லை. என்னை நிமிர்ந்து பார்க்கக்கூட தயங்கினான்.

“டீச்சர், கோபாலுக்கு நாங்க நாடகம் நடிக்கிறத பாக்க ஆசையா இருக்காம்... அவனும் நம்ப கூட இருக்கட்டும் டீச்சர்,” கெஞ்சலாய்ச் சொன்னான் தமிழரசன். சம்மதத்திற்கு அடையாளமாக நான் தலையை அசைக்க, கோபாலின் முகத்தில் மகிழ்ச்சி.

நாடகப் பயிற்சி கொஞ்சம் சவாலாகவே இருந்தது. மாணவர்களுக்கு அதிக பயிற்சி வேண்டும் என்பது திண்ணம். “துவண்டு விடாதே கனகம்உள்மனம் உரமேற்றியது. நாள் தவறாமல் பள்ளி முடிந்து நாடகப் பயிற்சி  நடைபெற, கோபால் எங்களின் எடுபிடியானான். மாணவர்களுக்குக் குடிக்க குளிர்பானம் வாங்குவது, சாப்பிட ஏதாவது வாங்கி வருவது அவனது தார்மீகக் கடமையானது. மற்றபடி நாடகத்திற்காக மேசை நாற்காலிகள் அடுக்குவதிலும் அவன் பங்கு இருந்தது. அதைவிட கோபாலுக்குப் பிடித்த சில விசயங்களும் நடக்கவே செய்தன. நாடகப் பயிற்சியின்போது யாராவது வராவிட்டால் அவர்கள் இடத்தில் அவன் நின்று சரி செய்வான்.

“கோபால் உனக்கு வசனம் வராது. அதனால கவலைப்படாத. சும்மா ஏதாவது பேசி பாவனை செய், போதும்,” என்ற சொன்ன மறுகணம், மானாய்த் துள்ளிக் குதித்து மேடை மேல் ஏறிக்கொள்வான். ஒப்புக்கு நிற்க வேண்டியிருந்தாலும் அதையே பெரிய பாக்கியமாகக் கருதிச் சிரத்தையோடு செய்தான். சகலகலா வல்லனாக அவன் கம்பீரத்தோடு நடமாடத் தொடங்கினான். முகத்தில் பொழிவும் கூடியது.

வேலையேதும் இல்லாதபோது தரையில் அமர்ந்துகொள்வான். அவன் பார்வை, அவன் சிந்தை எல்லாமே மேடை மேலுள்ள தன் நண்பர்கள் மேல் இருக்கும். பல வேளைகளில் மற்ற மாணவ்ர்கள் வசனம் பேச, அவன் வாயும் அசைவதைக் கண்டு குபீர்  சிரிப்பு வரும். நாளுக்கு நாள் நாடகப் பயிற்சி நல்லதொரு வளர்ச்சி காண, என் மனதில் குதூகலம் குடி கொண்டது. தமிழரசனின் நடிப்பில் எனக்குப் பரம திருப்தி. கட்டபொம்மனாகவே அவன் மாறிப் போனான். கண்ணனும் லிங்கமும்கூட சிறப்பாகவே நடித்தனர். பயிற்சிக்கு நடுவே தலைமையாசிரியர், துணைத்தலைமையாசிரியர்கள் வருவதும் பாராட்டுவதுமாக இருந்தனர். இடையிடையே கலை டீச்சரும்  நாடகப் பயிற்சியைப் பார்க்க வந்து போனார். கோபாலும் எங்களோடு மகிழ்ச்சியாகப் பயணித்தான்.

ஆவலோடு காத்திருந்த நாளும் வந்து விட உற்சாகத்தின் அளவு இயல்பைவிட கூடியது. நாடகம் இறுதி அங்கம் என்பதால் சிறப்பு விருந்தினர் வரவேற்பு முடிந்ததும் எங்கள் வகுப்பிலேயே ஒப்பனைகள் செய்யத் திட்டமிட்டேன். சட்டமன்ற உறுப்பினரை வரவேற்கும் பொறுப்பும் என்னை வந்து சேர்ந்ததால் என்னால் உடனே வகுப்பறைக்குச் செல்ல முடியாத நிலை.  ஒவ்வொரு நடிகருக்கும் தனித்தனி ஒப்பனையாளர்கள் தயார் செய்திருந்ததால் பயத்திற்கு இடமில்லாமல் போனது. முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் களம் இறங்க, என் பளுவும் குறைந்து போனது. தமிழரசனுக்கு ஒப்பனை செய்ய கலை டீச்சர் முன்வந்தார். சில மாணவர்கள் வீட்டிலிருந்தே ஒப்பனையோடு வருவதாகச் சொன்னது என் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது.

வெள்ளை பென்ஸ் கார் மண்டபத்தின் அருகில் கம்பீரமாய் வந்து நிற்க பள்ளி பரபரப்பானது. சட்டமன்ற உறுப்பினர் லாவகமாய்க் காரை விட்டு இறங்க வரவேற்புப் பகுதியினர் குதூகலமாய்ச் செயல்படத் தொடங்கினர். நானும் என் பங்கைச் செய்யத் தவறவில்லை. சட்டமன்ற உறுப்பினருக்குப் பன்னீர் தெளித்துச் சந்தனம் இட்டோம். அழகிய ரோஜாவை அவர் சட்டையில் செருகி உள்ளே அமரச் செய்தோம். ஒரு சில நிமிட வேலைக்கு எப்பேற்பட்ட ஆர்ப்பாட்டம். மனம் சளித்துக்கொண்டது. அடுத்த கணம் நான் வகுப்பறையில் இருந்தேன். ஒப்பனை வேலைகள் சிறப்பாக நடந்துகொண்டிருந்தன. வகுப்பின் மூலையில் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து கொண்டிருந்தான் கோபால். அவனை என்னவென்று சொல்வது. தமிழரசன் போல் படிப்பில் கெட்டிக்காரனாய் இருந்திருந்தால் அவனுக்கும் ஒரு வேடத்தைக் கொடுத்திருக்கலாம் என மனம் எண்ணியது.

வகுப்பறை, மண்டபத்தின் அருகிலேயே இருப்பதால் அங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைச் சுலமபாக அறிந்துகொள்ள முடிந்தது. உரைகள், ஆடல், பாடல், சொற்பொழிவு என நீண்ட பட்டியல் இருப்பதால் அவசரப்படத் தேவையில்லை.  நான் ஒவ்வொருவரிடமும் சென்று எல்லாம் சரியாக நடக்கிறதா எனச் சரி பார்த்துக்கொண்டிருக்க, கலை டீச்சர் வகுப்பிற்குள் வந்தார்.

“கனகம்... தமிழரசனை இன்னும் காணோம். மத்தவங்க எல்லாம் வந்துட்டாங்க. வெளிய போயி தேடிப் பாத்திட்டேன். ஆளைக் காணோம்,” குரலில் கவலை மேலிட்டாலும் சொல்லில் நிதானம் தெரிந்தது.

“என்ன டீச்சர் சொல்றீங்க. இந்நேரம் வந்திருக்கணுமே..”

மனம் படபடத்தது.

“நேத்து ராத்திரி கூட அவனுக்கும் போன் அடிச்சேன். ஏழரை மணிக்கெல்லாம் பள்ளிக்கு வரனும்னு சொன்னேன்,” புலம்பத் தொடங்கினேன்.

“எதற்கும் அவன் அப்பாவுக்குப் போன் அடிச்சுப்பாரும்மா...” கலை டீச்சர் சொல்ல யோசனைக்கு இடம் தராமல் செயல்பட்டேன்.

“ஐயோ டீச்சர். லைன் போகமாட்டுது. அவன் அம்மாவும் எடுக்க மாட்றாங்க

பின்னந்தலையில் யாரோ சுத்தியலால் ஓங்கி அடிப்பது போல் இருந்தது. தலையைப் பிடித்துக் கொண்டேன்.

சில வினாடிகளௌக்குப் பிறகு சுதாகரித்துக் கொண்டு, கோபாலைக் கூப்பிட்டேன். தமிழரசனின் பக்கத்து வீட்டு விசாலைத் தேடிப்பிடித்து கூட்டி வரச் சொன்னேன். மறுவார்த்தை பேசாமல் அவன் மண்டபத்தை நோக்கி ஓடினான். ஓரிரு நிமிடத்தில் விசாலோடு திரும்பி வந்தான்.

விசால், எங்கடா தமிழரசன்? அவன் ஸ்கூலுக்கு வந்தானா இல்லையா? உன் கிட்ட ஏதாவது சொன்னானா?” விசாலைப் பேச விடாமல் கேள்விகளை அடுக்கிக்கொண்டு போனேன். கலை டீச்சர் என் தோளைப் பற்றினார். பார்வையால் சமாதானப்படுத்தினார்.

விசாலை அருகில் அழைத்தார். விவரம் கேட்டார்.

“டீச்சர், சிரம்பான்ல இருக்கிற தமிழரசனோட அண்ணன் அடிபட்டுட்டாராம். அவங்க எல்லாம் சிரம்பானுக்குக் கிளம்பிப் போறாங்களாம். எங்க அம்மா சொன்னாங்க,” பதிலுக்காகக் காத்திருக்காமல் நொடியில் கண்களிலிருந்து மறைந்து போனான் விசால்.

எனக்குத் தலை சுற்றத் தொடங்கியது. அப்படியே தலையைப்பிடித்துக் கொண்டு சுவரில் சாய்ந்தேன். கலை டீச்சர் பதறிப்போனார்.

“கனகம், மனசப் போட்டு அலட்டிகாதம்மா. விசயத்தை எச்.எம்.கிட்ட சொல்லிடலாம். அவரு புரிஞ்சுப்பாரு. நீ என்ன சொல்ற?

பதில் சொல்ல வார்த்தை இல்லை என்னிடம். விழியோரம் கண்ணீர் எட்டிப் பார்த்தது.  தொண்டை அடைத்துக் கொண்டது. அறையில் இருந்தவர்களில் பரிதாபப் பார்வையை என்னால் தாங்க முடியவில்லை. சில நிமிடங்கள் மயான அமைதி. ஒரு முடிவுக்கு வந்தேன். கோபாலைத் தேடினேன். காணவில்லை.

“டீச்சர், கொஞ்சம் கோபால கூட்டிட்டு வரச்சொல்றீங்களா...  கலை டீச்சருக்கு அன்பாய் ஆணையிட்டேன்.

“கனகம்...”

“கூட்டிட்டு வரச்சொல்லுங்க டீச்சர்... ப்லீஸ்!” கண்களில் கண்ணீர் பொங்கிக் கொண்டு வந்தது. துடைத்துக் கொண்டேன்.

அரை மணி அதுவாய் கரைந்து போனது. கோபால் மூச்சிரைக்க என் முன் ஆஜரானான்.

“கோபால், சூழ்நில புரியாமா எங்க போன?” காரணம் இல்லாமல் அவன் மேல் கோபப்பட்டேன்.

கலை டீச்சர் பின்புறமாய் வந்து தோளைப் பற்றினார். திரும்பிப் பார்த்தேன், அவர் அருகில் தமிழரசன்.

“தமிழரசு... நீ எப்படி இங்க?” ஆச்சரியக் குறிகள் என் சொற்களை ஆக்கிரமித்தன.

“டீச்சர்... சிரம்பானுக்கு கிளம்பிகிட்டு இருந்தோம். கோபாலு வீட்டுக்கு வந்தான். என்ன நடிக்க வரச்சொன்னான். ஆனா, எங்க அப்பா முடியாதுன்னிட்டாரு...”

“அப்புறம்...?”

“கோபாலு அழுதான் டீச்சர். அப்பா கிட்ட கெஞ்சனான்...” தமிழசரன் கண்கள் கலங்கத்தொடங்கின.

கோபால் என்னை விட்டு நகர்வதாய்த் தெரியவில்லை. நினைத்தபடி நாடகம் வெற்றிகரமாய் அரங்கேறியது. வீரபாண்டிய கட்டபொம்மனாகவே மாறியிருந்தான் தமிழரசன். கரவோசையால் மண்டபம் அதிர்ந்தது. என் பக்கத்தில் என் வீரபாண்டிய கட்டபொம்மன் கம்பீரமாய் நின்றுகொண்டிருந்தான்.

Comments

Popular posts from this blog

எலி - யோகாம்பிகை இளமுருகன்

சமம் - சுமத்ரா அபிமன்னன்

கடா – AK ரமேஷ்