சகதி - AK ரமேஷ்

பூச்சோங் தமிழ் வாசகர் எழுத்தாளார் சங்க ஏற்பாட்டில் நடைபெற்ற ஒரு பக்கக்கதை (குறுங்கதை) போட்டியில் இரண்டாம் நிலையில் வெற்றிப்பெற்ற ஒரு பக்கக்கதை.

உள்ளம் முழுவதும் ஒரு வகையான திருப்தி. உள்ளுக்குள்ளே ஏதோ ஒரு பெருமிதம். கடந்த இரு நாட்களாகச் சமூக ஊடகங்களில் கண்ட காட்சிகளினூடே நிஜமாகவே நடந்து போகிறேன்.

காலை முதல், மூன்று வீடுகளைச் சுத்தப்படுத்தினோம். ஸ்ரீ மூடாவில் வெள்ளத்தினால் வீட்டுடைமைகளை இழந்தவர்களுக்கு எங்களின் உதவிக்கரம் மிகப்பெரிய ஆறுதலைத் தந்தது. ஜெகாவுக்கும் அவரது தொண்டூழிய இளைஞர்களுக்கும் அது பழகிப் போன விஷயம் தான். எனக்கு முதல் அனுபவம்.

நான்காவது வீடு மற்ற வீடுகளைப் போல் இல்லை. முழுக்க நாங்களே சுத்தம் செய்ய வேண்டிய நிலையில் இருந்தது. இரண்டு நாட்களாக எதுவுமே செய்யவில்லையா ? முழு வேலையையும் தொண்டூழியர்கள் தலையில் கட்டுவதா? மனதில் சின்ன கோபம். அதிகமான சேறு,  தாங்க முடியாத துர்நாற்றம். குமட்டிக் கொண்டு வந்தது. அந்த வீட்டு அம்மா சிலையாய் விட்டத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். நடுத்தர வயது. தோய்ந்த முகம். எல்லா உடைமைகளையும் பறிகொடுத்த வேதனை போலும். அதற்கு? இப்படியா நிற்பது? சேர்ந்து வேலை செய்யலாமே.தனக்குத்தானே உதவாதவர்களுக்கு நாம் ஏன் உதவ வேண்டும்.

“ஏம்மா? உங்க வீட்ல யாரும் சுத்தம் செய்ய வரலயா?” கிண்டலாகத்தான் கேட்டேன்.

“இல்லங்க மக(ள்) ஆஸ்பத்திரில இருக்கா. அவ இருந்தா எல்லா வேலையையும் நாங்களே செஞ்சிருப்போம்.”

“ஏன்? என்னாச்சு?

“அவுங்க அப்பா வெள்ளத்துல அடிச்சிகிட்டு போயிட்டாருங்க. அந்த பேங்க் பக்கதுலத்தான் பொணம் கெடச்சது. அத பார்த்ததும் அப்படியே மயக்கம் போட்டு உழுந்து தலைல அடி. ரொம்ப ரத்தம். இன்னும் மயக்கம் தெளில. பொணத்த ரொம்ப நாள் வெச்சிருக்க முடியாதுன்னு இன்னைக்கி காலைலதான் எங்க அப்பா வீட்ல வெச்சி எடுத்துட்டு இப்பத்தான் வர்றேன். அதுனாலத்தான் எதையும் செய்ய முடியலங்க. கோச்சிக்காதீங்க.

அந்த அம்மா கன்னத்தில் வழிந்தோடிய கண்ணீர் என் கர்வத்தைக் கரைத்தது. ஆறுதல் சொல்ல வார்த்தை வரவில்லை. முகக்கவரியை இறுக்கிக்கொண்டு துர்நாற்றத்தைப் பொருட்படுத்தாது மீண்டும் சகதியில் கால் வைத்தேன்.

Comments

  1. சகதி ! நடப்பு வெள்ளத்து குப்பைகள் போல்
    படம் காட்டிய அரசியல கொஞ்சம் அலசி இருக்கலாம். வாழ்த்துகள். 26/1

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

எலி - யோகாம்பிகை இளமுருகன்

சமம் - சுமத்ரா அபிமன்னன்

கடா – AK ரமேஷ்